சந்திரயான்-1 விண்கலத்தின் தோல்விக்கு வெப்பத் தாக்குதலே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், சந்திரயான்-1 சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை இஸ்ரோ நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்காமல் மறைத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டு மே மாதம் சந்திரயான்-1 விண்கலம், நிலவின் பாதையிலிருந்து 200கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு அது 100 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்தது. அந்த சமயத்தில் இருந்த வெப்ப நிலை, இஸ்ரோ கணக்கிட்டிருந்ததற்கு மாறாக இருந்துள்ளது.
இதையடுத்து அவசரமாக, உயரத்தை 200 கிலோமீட்டர் ஆக உயர்த்தியது இஸ்ரோ. இதன் காரணமாக அதிக வெப்பத் தாக்குதலுக்கு சந்திரயான்-1 விண்கலம் ஆளாகி, அதன் கம்ப்யூட்டர் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர் டாக்டர் அலெக்ஸ் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிலவின் தளத்திற்கு மேலே 100 கிலோமீட்டருக்கு மேல் 75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும் என கணித்திருந்தோம். ஆனால் அதை விட கூடுதலான வெப்ப நிலை இருந்துள்ளது. இதையடுத்தே 200 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்கலத்தை உயர்த்தினோம் என்றார்.
ஆனால் இந்த உயர அதிகரிப்புக்கான காரணமாக மே 19ம் தேதி இஸ்ரோ தெரிவித்தது என்னவென்றால், நிலவை தெளிவான கோணத்தில் பார்க்கவும், மேலும் விரிவான ஆய்வுகளுக்காகவும் சந்திரயான்-1 விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.
மேலும், 2008, நவம்பர் 25ம் தேதியன்றே சந்திரயான்-1 விண்கலம் வெப்ப பிரச்சினையை சந்திக்க ஆரம்பித்து விட்டதாம். இதன் காரணமாக விண்கலத்தில் இருந்த 11 பே லோடுகளில் சிலவற்றை செயலிழக்க வைத்துள்ளது இஸ்ரோ. இதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த செயலிழப்பு காரணமாக சில சோதனைகளை செய்ய முடியாமல் போயுள்ளது.
இதன் காரணமாக பெங்களூர் செயற்கைக் கோள் மையத்தில், சந்திரயான்-1 விண்கலத்தின் வெப்ப தடுப்பு சாதனம் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
நிலவின் பகல் நேர வெப்ப நிலை 107 டிகிரி செல்சியஸ் ஆகும். இரவு நேர வெப்ப நிலை -153 டிகிரி செல்சியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரச்சினைகளை சந்தித்த சந்திரயான்-1 இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி செயல்படத் தொடங்கியது. இருப்பினும் மீண்டும் பிரச்சினை தோன்றியதாம். இந்த முறை, சந்திரயான் விண்கலத்தின் இரு சென்சார்கள் அதிக வெப்ப நிலை காரணமாக கோளாறைச் சந்தித்துள்து. இந்த இரு சென்சார்களும், விண்கலத்தின் திசையை நிர்ணயிக்கும் முக்கியப் பணியைச் செய்யக் கூடியவை ஆகும்.
கோளாறு காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் சென்சார் செயலிழந்தது. 2வது சென்சார் மே மாதத்தில் செயலிழந்தது. இதுவும் சந்திரயான்-1 விண்கலத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
சந்திரயான்-1 விண்கலத்தை மறுபடியும் முறைப்படி செயல்படுத்த கைரோஸ்கோப்புகளைப் பயன்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் கடுமையாக முயன்றுள்ளனர். இருப்பினும் இதனால் பெரிய அளவில் பலன் ஏதும் ஏற்படவில்லையாம்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இஸ்ரோ அதிகாரி கூறுகையில், இது தற்காலிக நடவடிக்கையாகத்தான் இருந்தது. அதாவது உடைந்து போன கார் ஸ்டியரிங்கை டேப் போட்டு ஒட்ட வைத்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட நடவடிக்கைதான் அது. இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எங்களுக்கு அப்போதே தெரியும் என்றார்.
இப்படியாக சந்திரயான்-1 விண்கலம் பெரும் சிக்கலில் சிக்கி ஊசலாடிக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இது குறித்து இஸ்ரோ மூச்சு கூட விடாமல் இருந்திருக்கிறது. ஒரு வழியாக ஆகஸ்ட் 30ம் தேதி சந்திரயான்-1 திட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்தது.
ஆனால் சந்திரயான்-1 விண்கலத்தின் இரு முக்கிய சென்சார்களில் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் செயலிழந்த நிலையிலும் கூட விண்கலம் அருமையான படங்களை அனுப்பி வைத்துள்ளதாம். அதில் முக்கியமானது ஜூலை 22ம் தேதி நடந்த முழு சூரிய கிரகணம் தொடர்பான படங்கள்.
மேலும் ஆகஸ்ட் 21ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு நாசாவின் லூனார் ரீகனசயன்ஸ் ஆர்பிட்டாருடன் (LRO) சேர்ந்து நிலவின் வட துருவத்தின் மீது பறந்து, அங்கு பனிக் கட்டி படிந்திருக்கிறதா என்ற ஆய்வையும் மேற்கொண்டுள்ளது சந்திரயான்-1.
ஆனால் ஆகஸ்ட் 29ம் தேதி அதிகாலை 1.30 மணிக்குத்தான் சந்திரயான்-1 பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த நேரத்தில்தான் சந்திரயான்-1 விண்கலத்துக்கும், தரைத் தளத்துக்கும் இடையிலான தகவல் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டன.
சந்திரயான்-1 தோல்வியிலிருந்து கிடைத்த பாடங்களை வைத்து சந்திரயான்-2 திட்டம் முழுமையான முறையில் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார் அலெக்ஸ்.
வெப்பத் தடுப்புக் கருவிகளை முழுமையான அளவில் பரிசோதனை செய்து அவற்றை எந்தவித கோளாறும் ஏற்படாத வகையில் உருவாக்கும் பணியில் இஸ்ரோவுடன் தற்போது பாபா அணு ஆராய்ச்சிக் கழகமும் கை கோர்த்துள்ளதாம்.
சந்திரயான்-2 விண்கலம் 2013ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணுக்குச் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சந்திரயான்-1 விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட 11 சிறு சிறு விண்கலங்கள் தங்களது பணியை திட்டமிட்டபடி முடித்தனவா என்ற கேள்விக்கு இதுவரை இஸ்ரோவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த குட்டி விண்கலங்களை இந்தியா , அமெரிக்கா , இங்கிலாந்து , ஜெர்மனி, ஸ்வீடன், பல்கேரியா ஆகிய நாடுகள் உருவாக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment
Put your lucky comments