Vipulanandar

விபுலானந்தர் (1892 - 1947) (Swami Vipulananthar)
Vithurshan


சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணத்துத் தோன்றல்; இலங்கைச் செல்வம். அவர் தமிழிலுங் கலைஞர் ; ஆங்கிலத்திலுங் கலைஞர். அவர் தம் கலைமணம் அவரது பேச்சிலும் எழுத்திலும் கமழ்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ்ப் பேராசிரிய ராயிருந்தவர். இம் முயற்சி பண்டைத் தமிழர் கண்ட யாழை மீண்டும் உயிர்ப்பிக்க ஊக்கியது. பண்டைத்தமிழிசையின் பெருமையையும் தனித்த இயல்பையும் எடுத்துக்காட்டும் வகையில் "யாழ் நூல்" என்னும் அரிய இசையாராய்ச்சி நூலை ஆக்கியுள்ளார். சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் இவர் வல்லவர்.

சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார்.

இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியத்தைக் கற்றார். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.

கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய இராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், Vedanta Kesari என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

செட்டி நாட்டரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள Almorah என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரத' (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.

1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களை சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது.

யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல், சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 'யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்' என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளித்துள்ளது.

ஈழநாட்டிற் பிறந்தேனாயினும் ஈழத்து வழக்குத் தமிழில் எனக்கு அதிகப் பழக்கமில்லை. கற்றது புத்தகத் தமிழ். கலந்து பழகி ஒரு சிறிது பயின்று கொண்டது சோழ நாட்டுத் தமிழ். இலங்கையிலே நான் நண்பரோடு உரையாடும் போது, என் உரையைக் கேட்டார்." சாமி பேசுவது வடக்கத்திய தமிழ்" என்று சொல்ல நான் பலமுறை கேட்டதுண்டு. இலங்கையிலுள்ளோர் தென்னாட்டுத் தமிழரை "வடக்கத்தியார்" என்பது வழக்கம். தென்னாடு ஈழத்திற்கு வடநாடுதானே? இஃது இப்படியிருக்க ஒருநாள் சென்னை ஜார்ஜ் டவுனிலே ஒரு கடைக்காரன் என்னை நோக்கி , " சாமிக்கு ஊர் பாலைக் காடா?" என்று வினாவியதுண்டு.
- விபுலானந்தரின் (கலைமகள் கதம்பம்)
Share on Google Plus

About Vithurshan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Put your lucky comments